இந்தியா, இஸ்ரேல், உக்ரைன் உட்பட பல நாடுகளிலிருந்தும் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்குப் பலரும் ஸ்ரீலங்காவிற்குப் படையெடுத்துவரும் நிலைமை உருவாகியுள்ளது. இதனால், தெற்காசியாவில் பொருளாதார கேந்திர நிலையமாகத் திகழும் ஸ்ரீலங்கா, தற்போது சிறுநீரக கொள்ளையர்களின் குகையாக மாறிவருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
Inline image 1

வறிய மக்களைக் குறிவைத்தே சிறுநீரக வேட்டை அரங்கேற்றப்பட்டுவருகிறது. அதிலும் குறிப்பாக, மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்தியே வலை விரிக்கப்படுகிறது என்று புலனாய்வுப்பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி சட்டவிரோதமாக சிறுநீரகம் பறிக்கப்படுகின்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணனும் தகவல் வெளியிட்டிருந்தார்.

2012ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற சட்டவிரோத சிறுநீரக பரிமாற்று நடவடிக்கைத் தொடர்பில் இஸ்ரேலின் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத சிறுநீரக வணிகத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் இந்தியாவில் மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்காவிலும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே சட்டவிரோத சிறுநீரக வேட்டை அரங்கேற்றப்பட்டுவருகிறது என்பதற்குரிய ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குரிய நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருவதால் ஸ்ரீலங்காவில் இதுவரைகாலமும் இவ்விடயம் பெரிதாகப் பேசப்படவில்லை. தகவல்களும் அம் பலமாகவில்லை. தற்போது இரகசியத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

இதையடுத்தே தேடுதல் வேட்டையும் விசாரணைகளும் பொலிஸாரால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாக ஸ்ரீலங்காவின் வைத்தியர்கள் அறுவருக்கு எதிராக இந்தியாவில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

மோசடி வலையில் சிக்கியவர்கள்

இந்நிலையில், மலையகத்தில் சிறுநீரக மோசடி வலையில் சிக்கிய கந்தன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

Inline image 5
சத்திரசிகிச்சையின் பின்னர் கந்தனின் உடற்பகுதி…..

அவரின் விழிகளில் விழிநீர் பெருக்கெடுக்கத் துவங்கியது. விம்மி அழுதபடியே தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காக சாரத்தால் முகத்தை துடைத்துக்கொண்டு, தனக்கு நேர்ந்த அவலத்தை விவரிக்கத் தொடங்கினார்.

“”ஒன்னரை லெட்சோ தாரேனு சொன்னாங்க. ஆனா, பத்து ஆயிரம் தா கொடுத்தாங்க” என்றார். கண்ணீருக்கு அவரால் அணைபோட முடியவில்லை.

“” நா பங்களா ஒன்னுல வேல செஞ்சே. கிட்னி கொடுத்தா சல்லி குடுப்பாங்கனு என்னோட அந்த பங்களாவுல வேல செஞ்ச பொடியே சொன்னா. மொதல்ல நா விரும்பல்ல. எனக்கு நாலு புள்ளைங்க இருக்காங்க. வறும காரணமாகத்தான் அத குடுக்க சம்மதிச்சே. என்னோட கிட்டினிய யாருக்கு குடுத்தாங்கன்னுகூட எனக்குத் தெரியாது.” இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே மறுபடியும் அழுவதற்கு ஆரம்பித்தார் கந்தன்.

வலது கையில் எப்பொழுதும் இருப்புக்கம்பியொன்றை ஏந்தியுள்ளார். தனக்கு வலிப்பு வரும் என்பதால்தான் இப்படி வைத்துள்ளார் என்று கூறினார். சிறுநீரகத்தை வழங்கிய பின்னரே தனக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். தான் எந்த வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார். யாருக்கு சிறுநீரகம் வழங்கப்பட்டது என்ற விவரம் எதுவுமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

வெற்றிலை வாங்குவதற்காக 20 ரூபா தருமாறு அழுத குரலில் எம்மிடம் கேட்ட அவருக்கு கிட்னி பல இலட்சங்களுக்கு விற்கப்படுவது தெரிந்திருக்க நியாயமில்லை. விவரம் அறியா இவர்களைப் போலுள்ளவர்களை நன்கு விவரம் அறிந்தவர்களே திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள்.

இவ்வாறானதொரு பின்புலகத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு தனது சிறுநீரகத்தைப் பறிகொடுத்த மற்றுமொரு இளைஞன் சம்பந்தன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

Inline image 2
சத்திரசிகிச்சையின் பின்னர் சம்பந்தனின் உடற்பகுதி…..

தலவாக்கலையிலுள்ள எபோஸ்ட்லி தோட்டத்தில் வசித்துவருகிறார். 5 இலட்சம் ரூபா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பின்னர் தமது சிறுநீரகங்களுள் ஒன்றை வழங்குவதற்கு அவர் இணங்கியுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவருக்கு சிறுநீரகம் வழங்குவதற்காகவே 2014ஆம் ஆண்டு அவர் கொழும்பு வந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவருக்கே தனது சிறுநீரகம் வழங்கப்பட்டது என்றும், குறிப்பிட்ட நபரது உறவினர் என்று தன்னை வைத்தியசாலையில் அறிமுகப்படுத்தியே சிறுநீரகம் பெறப்பட்டது என்றும் கூறினார்.

எனினும், சிறுநீரகம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அவர் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளார். உறுதியளிக்கப்பட்ட தொகை அவருக்கு வழங்கப்படவில்லை. பணம் தருவதாகக் கூறியவர் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர்களை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டார் என்றும், அப்போதுதான் போலி இலக்கம் வழங்கப்பட்டுள்ள விடயம் தனக்குத் தெரியவந்தது என்றும் தனக்கு நேர்ந்த அவலத்தை எம்மிடம் விவரித்தார் சம்பந்தன். இவரும் கந்தனைப்போன்றே குடும்ப வறுமை காரணமாகவே பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுநீரகத்தை வழங்கியுள்ளார்.

இவ்வாறு சீறுநீரகம் வழங்கப்பட்டதும் நான் ஏமாந்ததும் எப்படியோ வெளியே தெரியவந்ததால் தனது நண்பர்களும் தன்னை கேலி செய்வதால் வாழ்க்கை அவமானமாக இருக்கிறது என்கிறார் சமபந்தன்.

சிறுநீரகத்தை வழங்கிய பின்னர் கடினமான எந்தவொரு தொழிலிலும் ஈடுபடமுடியாத துரதிர்ஷ்ட நிலைக்கு தான் தள்ளப்பட்டதால் கொழும்பிலுள்ள வீடொன்றில் இலகு வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்தச் சிறுநீரக மாற்று சிகிச்சையில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் மனிதாபிமான ரீதியில் வைத்திய தர்மங்களுடன் சிறுநீரகத்தை வழங்கியவரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. விவரம் அறியா அப்பாவிகளை ஏமாற்றியதுடன், அவர்களின் உடல் ஆரோக்கியமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இது முற்றுமுழுதான ஒரு மனித உரிமை மீறல்.

பிச்சைக்காரனையும் விட்டுவைக்காத சிறுநீரக வியாபாரிகள்

விவரமற்றவர்களை நாடி ஏமாற்றும் இடைத்தரகர்கள் பிச்சைக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை.

தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு முன்பாக யாசகம் செய்துகொண்டிருந்தவர் (வயது 24) ஊனமுற்று வேறு இருந்தார்.

Inline image 4
யாசகர்
8 வருடங்களாக யாசகத்தில் ஈடுபட்டுவரும் தன்னை நாடிய இனந்தெரியாத நபர்கள் சிலர், நிறைய பணம் தருவதாகவும், சிறுநீரகத்தை வழங்குமாறும் கேட்டனர். தான் அதற்குச் சம்மதிக்கவில்லை என்றும் கூறினார்.

இப்படி மூன்றாம் தரப்பினர் ஊடாக தலவாக்கலை பகுதியில் பலரிடம் சிறுநீரகம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. நாம் சந்தித்த நபர்கள் சிலர் இதை ஒப்புக்கொண்டனர். எனினும், மேலதிக தகவல்களை வெளியிடுவதற்கு அவர்கள் தயக்கம் காட்டினர்.

சிறுநீரக வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சுமார் 30 இலட்சம் ரூபாவரை பணம் பெறுகின்றனர் என்றும், வழங்குபவருக்கு இதிலிருந்து 5 இலட்சம் ரூபாவரைதான் வழங்கப்படுகின்றன என்றும் விடயமறிந்தவர்கள் தெரிவித்தனர். இச்செயல் சட்டத்திற்கு முரணாக இருப்பினும், பணத்திற்காகவே இதில் ஈடுபட்டதாகக் கூறும் இந்த நபர்கள், உடல் உபாதையைத் தவிர வேறு எதையுமே பெறவில்லை

Inline image 3
லிந்துலை வைத்தியசாலை மருத்துவர் பிரபாஷ்

“”ஹட்டன் பிரதேசத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் பணத்திற்காக சிறுநீரகம் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன” என்று தலவாக்கலை லிந்துலை வைத்தியசாலையின் மருத்துவர் பிரபாஷ் கருணாநாயக்க உறுதிப்படுத்தினார்.

சிறுநீரகத்தைப் பணத்துக்கு விற்பனை செய்யத் தயாரான பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் என்னிடம் வந்து ஆலோசனை கோரினர் என்று தெரிவித்த மருத்துவர், அவ்வாறு செய்வதால் பின்விளைவுகள் ஏற்படுமா என வினவினர். விடயத்தை விளங்கப்படுத்தினேன். பணத்திற்கு சிறுநீரகத்தை விற்பனை செய்வது சட்ட விரோதம் என்றும் அவர்களுக்கு கூறினேன். விற்பவர்களுக்கு தெளிவுபடுத்தியதாகவும் கூறினார்.

தமிழ் இளைஞர்களே அதிக ஆர்வம்

சிறுநீரகத்தை விற்பனை செய்வதில் சிங்களவர்களை விடவும், தமிழ் இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் என்றும் மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

புலனாய்வு விசாரணைகள் ஆரம்பம்

சிறுநீரக வியாபாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றபோதிலும், அவை பற்றிய எந்தவொரு முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லை என்று லிந்துலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இது தொடர்பில் தேடுதல் வேட்டை நடத்தும் பணியில் புலனாய்வுப் பிரிவினரை களமிறக்கி இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், பாதிக்கப்பட்டவருக்கு அரசாங்கம் இதுபற்றி உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை இரகசியமாகப் பேணுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாரிய தொழிற்சங்கங்களுள் ஒன்றான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்ட தேவைகள் தற்போது எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண சபையில் ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை தான் கொண்டுவரவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பெண்களை நாடுவது குறைவு

சிறுநீரக வியாபாரம் தொடர்பில் மலையகப் பகுதிகளில் ஆண்களே குறிவைக்கப்படுகின்றனர்.பெண்களை எவரும் பெரிதாக நாடுவதில்லைபோல் தெரிகிறது. நாம் பல பெண்களிடம் விசாரித்தோம். எவருமே தம்மை அணுகவில்லை என்று குறிப்பிட்டனர். இதனை பெயர் குறிப்பிட விரும்பாத மகளிர் அமைப்பின் பிரதிநிதியொருவரும் எம்மிடம் உறுதிப்படுத்தினார்.

பெருந்தோட்டத்துறையில்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் அப்பாவி மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். பண ஆசையைக் காட்டி இவர்களை ஏமாற்றி சிறுநீரகங்களைப் பெற்றுக்கொள்கின்றனர் என்று தெரிவித்தார் சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய. இதன் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் முன்வைத்தார்.

இந்தியாவில் சட்டவிரோத சிறுநீரக விநியோகம் உச்சத்தைத் தொட்டதால் அந்நாடு புதிய சட்டத்தை அமுல்படுத்தியது. ஊறவினர்களைத் தவிர வேறு எவருக்கும் வழங்கமுடியாது என்ற ஷரத்து உள்ளடக்கப்பட்டது.

ஆனால், இலங்கையில் அந்த நிலைமை இல்லை என்று சுட்டிக்காட்டினார் சட்டத்தரணி சேனக பெரேரா. பணத்தை மையப்படுத்தி சிறுநீரகத்தை வழங்குபவரும், வாங்குபவரும் என இருவருமே குற்றவாளிகளாகவே கருதப்படுவர் என்றும் அவர் கூறினார்.

உடல் உறுப்புகளைப் பணத்துக்கு விற்பனை செய்வது சட்டவிரோத நடவடிக்கை என்பது பலருக்குத் தெரியாதுள்ளது. குற்றவியல் சட்டக்கோவையில் 2006ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒருவர் தனது உடல் உறுப்புகளைப் பணம்பெறும் நோக்கில் விற்பனை செய்வதானது குற்றமாகும். இதற்காக ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க முடியும். இவர்களுக்கு சட்ட உதவிகளும் வழங்கப்படாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களுள் ஒருவரான பிரதீபா மஹாநாம ஹேவா விளக்கமளித்தார்.

சட்ட ஆலோசனை

இந்நிலையில், “”சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாவுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதேவேளை, சுகாதார அமைச்சும், சிறுநீரக வியாபாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஐவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்தக் குழு அடுத்தவாரம் இடைக்கால அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கவுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மலையகத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சிறுநீரக வியாபாரம் குறித்தும் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்கிரம தெரிவித்தார்.