அரனாயக்க சாமசர கந்தை மண்சரிவு ஏற்பட்டு இரண்டு தினங்களுக்கு பின்னர் கொழும்பில் இருந்து எனது ஊர்(வில்பொல அரனாயக்க) நோக்கிச் செல்கின்றேன். மாவனல்லையில் இருந்து அரனாயக்க பஸ், பாடசாலை நேரங்கள்தவிர்ந்த ஏனைய நேரங்களில் சாதாரண கூட்டமாகவே இருக்கும். வழமைக்கு மாறாக பஸ் பூராகவும் சனக்கூட்டமும்,புதிய பல முகங்களும், ஊடகவியலாளர்களும் பஸ்ஸில் நிறைந்திருந்தனர். மாவனல்லையில் இருந்து அரனாயக்கபாதையில் என்றுமில்லாதவாறு வாகன நெறிசலும் காணப்பட்டது. வாகன நெறிசலில் ஓரிரு அம்பியுலன்ஸ்வாகனங்களும் சிக்கியிருந்ததை கண்டேன்.

(ஆதில் அலி சப்ரி)

அரனாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைக் காண, நிவாரணப் பொருட்களை கையளிக்க ஏராளமானோர், நாட்டின்பல பாகங்களிலிருந்தும் வருகை தந்தவண்ணமுள்ளனர். பார்வையாளர்களால் பாதிக்கப்பட்டவர்களை, நோயாளிகளை,முகாம்களில் இருந்த சில கர்ப்பிணித் தாய்மார்களை எடுத்துச் செல்வதற்குக்கூட முடியாதளவுக்கு வாகன நெறிசல்ஏற்பட்டிருந்தது. ஒவ்வொரு வாகனத்திலும் இறந்தோருக்கு இரங்களும், வெசாக் நன்கொடை, குறிப்பிட்டவர்களின் ஊர்,சங்க பெயர்கள் உள்ள பெனர்களையும் மாட்டிக்கொண்டு, சிலர் உல்லாசமாகவும் வந்துசெல்கின்றனர்.
இவையனைத்தையும் தாண்டி வீட்டுக்குச் சென்று, ஏற்கனவே எனது வீட்டில் மூன்று நாட்களாக தங்கி ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்த சக ஊடகவியலாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றேன். அங்கு கவலையுடன் சென்றாலும்,பாதிக்கப்பட்டவர்களைக் சுகம் விசாரிக்க படையெடுப்பவர்களின் செய்கைகள் சுவாரஷ்யமாக இருந்தது. கண்ணாடியும்,கெமராவுமாக. சரிவுக்குள்ளான மலையை பின்னணிக் காட்சியாக கொண்டு செல்பியெடுப்பதும், ஊடகவியலாளர்கள்பாதிக்கப்பட்டவர்களை இடத்துக்கிடம் வைத்து, அழுகைக் காட்சிகளைப் படமெடுப்பதைப் பார்க்க சங்கடமாக இருந்தது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நடமாடிய போது பலவிதமான மனிதக் கதைகளை கேட்க முடிந்தது. இராணுவப் பிரிவுத்தலைவர் ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். ்எமது படையணியே மீரியபெத்த அனர்த்தத்தின்போதும் மீட்புப் பணியில் ஈடுபட்டது. அரனாயக்க மண்சரிவு மீரியபெத்தயை விடவும் நான்கு அல்லது ஐந்து மடங்குகள்பெரியதாகும். பாரிய பரப்பொன்று சரிவுக்குள்ளாகியுள்ளது. உயிரிழப்புகளும் அதிகமாகும். மீரியபெத்த மீட்புப் பணிகளைஆறு நாட்களுடன் நிறுத்திவிட கட்டளையிடப்பட்டது. இப்பணிகளும் சிறிது நாட்களில் நிறுத்தப்படும். முற்றாகசடலங்களை மீட்பதென்பது சாத்தியமில்லாத ஒரு காரியமாகும்.
இங்கு சரிந்துள்ள வீடுகள் 20 அல்லது 30 அடிகள் மண்ணில் புதைந்துள்ளது. ஒரு வீடுகூட மேலால் இல்லை. நாம்மலையில் உள்ள நீர் ஊற்றுக்களை சடலங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் இடங்களுக்கு செலுத்தி, அதன் மூலம்சடலங்களை மீட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. மண்களை மேடுகளை வெட்டி, சில மரங்களை அகற்றி, வீட்டுகொங்கிரீட்களை உடைந்து சடலங்கை எடுத்துள்ளோம். சிலபோது பனிமூடி, இடி முழங்கும் போது மண்சரிவுகள்ஏற்பட்டது.
எமது 25பேர் கொண்ட அணியில் ஒரு வீரர் சேற்றுக் கிணற்றில் கழுத்துவரை புதைந்தபோது காப்பாற்றப்பட்டார். நாம்தினமும் காலையில் இருந்து மாலை வரை மழையில் நனைவதும் காய்வதும், சிறிய மண் சரிவுகளின் போது ஓடிஒதுங்குவதுமாக இந்த பணியை முன்னெடுத்து வருவதாக அரனாயக்கவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவப்பிரிவுத் தலைவர் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ஜே.பீ.தனுஷ்க, தாய், தந்தை, சகோதரனுடன் சாமசர மலையின் சிரிபுர கிராமத்தில் வாழ்ந்துவந்தவர். தனுஷ்க தொழில்நிமித்தம் கண்டி மாநகரில் வசித்து வந்தார். தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக சம்பவ தினத்தன்றுகாலை தாய், தந்தை, சகோதரனை மலைக்கு கீழ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கூட்டிவந்துள்ளார் தனுஷ்க. சிரிபுரமலையிலிருந்த பெற்றோரின் வீடு மண்சரிவுக்குட்பட்டுள்ளது. இது தொடர்பாக தனுஷ்க எம்மிடம் கூறியதாவது,
தொடர்ந்து மூன்று நாட்களாக அடைமழை பெய்துவந்தது. இப்பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகஎவரும் எமக்கு அறிவூட்டவில்லை. கடுமையான மழை காரணமாகவே எனது தாய், தந்தை, சகோதரனை மலையின்கீழ் பகுதியில் உள்ள எனது வீட்டிற்கு கூட்டிவந்தேன். கடந்த 17ஆம் திகதி மாலை 5மணிக்கு இடிமுழக்கத்துடன் பாரியசத்தமொன்று கேட்டது. நான் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, சாமசர மலையில் மண்சரிவுற்று, மரங்கள்,கற்பாறைகளுடன் மலையடிவாரத்தை நோக்கி சரிந்து வரத்தொடங்கியது. நான் எனது மனைவி, தாய், தந்தை,சகோதரனுடன் பாதுகாப்பான பிரதேசம் நோக்கி ஓடினேன். மண் சரிவு மலையடிவாரத்தில் இருந்த எனது வீட்டருகேவரை வந்துள்ளது. மலை உச்சியில் இருந்த தாயின் வீட்டைக் காணவில்லை என்றார் தனுஷ்க.

டீ.பீ.நிமல் ரத்னசிரி சாமசர மலையடிவாரத்தில் பெட்டிக் கடையொன்றை வைத்திருந்த சில்லரை வியாபாரி. சம்பவம்இடம்பெறும் போது இவர் கடையிலே இருந்துள்ளார். பெரும் சத்தத்துடன் ஏற்பட்ட மண்சரிவு, சேறு, கற்பாறைகள்,மரங்கள் மலையடிவாரத்தில் இருந்த நிமலின் கடைச் சுவர் வரை வந்துள்ளது. நிமல் ஒரு நொடியில் தப்பியுள்ளார்.இது தொடர்பாக நிமல் கூறும் போது, நான் கடைக்கு வெளியே வந்து பார்க்கும் போது மலை முழுமையாக பனியால்மூடுண்டிருந்தது. உயர்ந்திருந்த மரங்கள் மலையடிவாரத்தில் சரிந்திருந்தது. சேறும் கற்பாறைகளும் எனது கடையருகேசரிந்து வந்திருந்தது. நான் அப்போதே கடையை மூடிவிட்டேன். இப்போது ஏன் கடையை திறந்து வியாபாரம்நடத்துகிறீர் என நிமலிடம் கேட்டபோது, புதன் கிழமையில் இருந்து இப்பிரதேசத்தைப் பார்வையிட தினமும்ஆயிரக்கணக்கானோர் வருகைதருகின்றனர். அவர்களின் தேவைகளுக்காகவே கடையை தொடர்ந்தும் நடாத்திச்செல்கிறேன் என்றார்.

இராணுவ வீரர் சம்பத், யாழ்பாணம் இராணுவ முகாமொன்றில் சேவையாற்றி வாந்தவர். கடந்த ஏப்ரல் மாதத்தில்திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். திருமணமாகி இரண்டு வாரங்களில் இராணுவ முகாமுக்குச் சென்ற சம்பத்,கடந்த 15ஆம் திகதி விடுமுறை பெற்று வீட்டுக்கு வந்துள்ளார். சம்பத் சாமசர மலையின் பல்லேபாகே கிராமத்தில்,மனைவி, தாய், தந்தையுடன் வசித்துவந்தான். திருமணமாகி ஒரு மாதத்தில் தனது ஆசைமனைவியுடன் பொழுதைக்களிக்க வந்த சம்பத்துக்கு, அது வாழ்க்கையின் இறுதிப் பொழுது என்பது தெரிந்திருக்கவில்லை. அன்று சம்பத்தின்தந்தை திப்பிடிய நகருக்குச் சென்றிருந்தார். சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவில், இராணுவ வீரர் சம்பத், மனைவி,தாய் ஆகியோர் உயிரிழந்தனர். கடந்த 20ஆம் திகதி, சம்பத்தின் தேகத்துக்கு இராணுவ மரியாதையுடன், துப்பாக்கிகள்முழங்க இறுதிக் கிரியைகள் நடைபெற்றது.

சம்பவ தினத்தன்று மாலை 5மணியளவில் தெபத்கம பக்கத்தில் இருந்து பாரிய வெடிப்பு சத்தமொன்று கேட்டது. நான்மோராகம்மன தக்கியா அருகில் வந்து அங்கிருந்தவர்களிடம் இது தொடர்பாக கூறினேன். அதிகமானோருக்கு இந்தவெடிப்பு சத்தம் கேட்டிருக்கவில்லை.
நான் ஹஜ்ஜம்பல நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மண்சரிவு தொடர்பாக அறியந்தந்தார்.
எனது குழந்தையையும் மனைவியையும் பக்கத்து வீட்டில் நிறுத்திவிட்டு, நானும் நண்பன் ராசிக் உடயாரும் சம்பவஇடத்துக்கு விரைந்தோம். அங்கு பொலிஸார் குவிந்திருந்தனர். யாரையும் சம்பவ இடத்துக்குச் செல்லஅனுமதிக்கவில்லை.
எனது உற்ற நண்பன் சரத்தின் வீடும் இவ்வனர்த்தத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்தே நான் இடத்துக்கு போகமுயற்சித்தேன். எனினும் சம்பவ தினத்தன்று போக முடியவில்லை. சரத் நோயாளி ஒருவரைப் பராமரிக்கவைத்தியசாலையில் தங்கியிருந்ததால் உயிர் தப்பியிருந்தான்.
அடுத்தநாள் விடியற் காலையில் நானும் ராசிக் உடயாரும் சென்று ஆற்றைக் கடந்து சரத்தின் வீடு இருந்த மலைஉச்சிக்கே சென்றோம். சரத்தின் வீடு இருந்த இடத்தின் அடையாளம்கூட தெரியவில்லை. சரத்தின் மனைவி, மூன்றுகுழந்தைகள் உயிரிழந்திருப்பார்கள் என்று எண்ணி அவ்விடத்தில் தேட ஆரம்பித்தோம். சிறிது தோண்டிய போதுசரத்தின் மூத்த மகனைக்(14) கண்டெடுத்தோம். அவரின் தலை நசுங்கி காயமடைந்து உயிரிழந்திருந்தார்.இராணுவத்தினர் தேடுதல் பணிகளை ஆரம்பிக்க முன்னர் மீட்கப்பட்ட முதலாவது சடலம் இதுவாகும். நாம் இந்தசடலத்தை எடுத்தவுடன் இராணுவத்தினர் மலைக்கு வந்துவிட்டனர். சடலத்தை ஒப்படைத்துவிட்டோம்.இராணுவத்தினர் எம்மையும் பாதுகாப்பாக அப்புரப்படுத்திவிட்டனர். சரத் நோயாளி ஒருவருடன் வைத்தியசாலையில்தங்கியிருந்ததால் உயிர் பிழைத்திருந்தார். நான் மட்டும் எஞ்சியிருந்து என்னதான் செய்ய என்றுஅழுதுபுழம்பிக்கொண்டிருக்கிறார் நண்பன் சரத் என்று அரனாயக்க சம்பவத்தின் முதலாவது சடலத்தை மீட்டெடுத்தமோராகம்மனை முஹம்மத் சித்தீக் தெரிவித்தார்.

அரனாயக்க மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் ஊடகப் பிரிவு படப்பிடிப்பாளர் ஒருவரை சந்தித்து அவரதுஅனுபவத்தைகேட்டபோது, மண்சரிவு ஏற்பட்ட தினத்தன்று இரவு 7மணியாகும் போது நாம் சம்பவ இடத்துக்குவந்துவிட்டோம். எனினும் இரவு நேரத்தில் மலைக்குச் செல்ல எமக்கு கட்டளையிடப்பட்டிருக்கவில்லை. சிறிது மலைப்பகுதிக்குச் சென்றுதிரும்பினோம். அதற்கு காரணம் மலைப்பகுதியை முழமையாக பணி மூடியிருந்தது. இடையிடையேசிறிய சரிவுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அடுத்தநாள் காலை நாம் 5 பேர் ஒரு சிறிய அணி, மலையின் வலப்பக்கமாகமேலே சென்றோம். அங்கு எமக்கு ஒரு ஆச்சரியம் காணப்பட்டது. மலை உச்சியில் சரிவு ஏற்பட்ட பகுதியை அண்மித்துஒரு சிறிய வீடு இருந்தது. அந்த வீட்டிற்கு சென்று பார்த்தால், ஒரு முதிய தாத்தாவும் பாட்டியும் இருந்தனர். அந்தமுதியவரின் காலில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக நடக்க முடியாமலும், பாட்டி சிறிது நடமாட, வீட்டுவேலைகள் செய்யப்கூடியவராகவும் இருந்தனர். நாம் அங்கு செல்லும்வரையில் அவர்களுக்கு கீழே வருவதற்கானவசதிகள் இருக்கவில்லை. நாம் அவர்களை மீட்டு, தூக்கிக்கொண்டுவந்தோம். அவர்கள் இருவரும் மண்சரிவு ஏற்பட்டபிரதேசத்தில் தொடர்ந்தும் இருந்திருப்பின் அடுத்ததினம் ஏற்பட்ட சிறிய மண்சரிவில் அகப்பட்டுஉயிரிழந்திருக்கக்கூடும். அப்பிரதேசத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்ததைப் பார்த்த எமக்கு கண்ணீர் வந்தது என்று அவர் தனதுஅனுபவத்தைக் கூறினார்.

முழுக்குடும்பத்தையும் இழந்த இளைஞன் சுனில் சாந்த தனது சம்பவத்தை எம்மோடு பகிர்ந்துகொண்டார். அன்று பகல்உணவு உட்கொண்ட பின்னர் நான் தூங்கியிருந்தேன். மாலை 4.45மணிக்கு நித்திரை விட்டெழுந்து கடைக்குச் செல்லவேண்டும் என்று அம்மாவிடம் கூறினேன். காலநிலை மோசமாக இருந்ததால் அம்மா என்னை கடைக்குச் செல்லவேண்டாம் என்றாள். நான் அம்மாவின் பேச்சை மீறி சிகரட் புகைப்பதற்காக கடைக்குச் சென்றேன். நான் கடைக்குச்செல்லும் போது எனது வீட்டுப் பிரதேசத்தில் பனி மூட்டமாக இருந்தது. நான் கடைக்குச் சென்று திரும்பும் போதுபாரிய சத்தத்துடன் மண்சரிவு ஏற்பட்டது. எனது ஊர் முற்றாக மண்ணில் புதைந்துவிட்டது. எனது தாய், தந்தை,சகோரதரி, சகோதரியின் சிறிய குழந்தை ஆகியோரை இழந்துவிட்டேன், என்று கண்ணீருடன் புலம்பினான் இளைஞன்சுனில் சாந்த.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான மனிதக் கதைகள் ஒவ்வொரு அனர்த்தத்திலும் புதைந்துள்ளது.