இலங்கையில் மூன்று தசாப்தங்களாக புரையோடிப் போயிருந்த உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போதும் வடக்கில் ஆயுதம் தாங்கிய அரச படையினரின் பிரசன்னம் இன்னும் குறைந்ததாக இல்லை. மக்கள் நடமாடும் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் குவிந்திருக்கின்றன. இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது.

ஏ. முஹம்மத் பாயிஸ்

வட மாகாணத்தில் மக்களின் குடியிருப்புகளை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள இடங்களில் ஒன்றே சிலாவத்துறை. இங்கு ஊரின் பிரதான பகுதியில் கடற்படையினரும் இராணுவத்தினரும் நிலை கொண்டுள்ளதால் முகாம்களைச் சுற்றி வசிக்கும் மக்கள் இயல்பு வாழ்கையை வாழ்வதற்கும் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளைச் செய்வதற்கும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
Abdur razak_ fisher man ‘முத்து சிலாவத்துறைதான் இந்த ஊரின் பெயர். மீன்பிடி, விவசாயம் என ஒரு காலத்தில் செஞ்செழிப்பாக வாழ்ந்தோம். 1990 ஆம் ஆண்டில் இந்த ஊரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டோம். பின்னர் 2009 ஆம் ஆண்டு சிலாவத்துறைக்கு வரும்போது ஊரின் நகர்ப் பகுதியில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருந்தது. இன்னுமொரு புறத்தில் இராணுவம் என படையினரின் பிரசன்னம் இங்கு அதிகமாகவே இருக்கின்றது. கடற்றொழிலை சுதந்திரமாக செய்ய முடியவில்லை. மீனவர்களுக்குரிய கடற்கரைப் பகுதியை இன்று படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடற்றொழில் செய்வதென்றால் இப்போதெல்லாம் படையினரின் அனுமதி எடுக்க வேண்டும்.’
பீ.எம். அப்துர் ரஸ்ஸாக்
கடற்றொழிலாளி

இலங்கை வரலாற்றில் சிலாவத்துறை தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு கிராமமாகும். சிலாவத்துறையானது வட மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே ஒரு பிரதேசமான முசலிப் பிரதேசத்தின் தலைநகர். இலங்கையில் முத்துக்குளிப்பிற்கு பெயர்போன கிராமமிது.
M.T.M. Fais -Principal 1929 ஆம் ஆண்டு இலங்கையில் உருவாக்கப்பட்ட ஆறு உப தபாலகங்களில் சிலாவத்துறையும் ஒன்றாகும். இவற்றில் சிலாவத்துறை உப தபாலகமே முதலில் ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு புறம் கடலும் மறுபுறம் நெல் வயல்களும் என பொருளாதார வாய்ப்புகளைக் கொண்ட சிலாவத்துறை இன்று இராணுவ சூழலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கிறது.
சிலாவத்துறை எங்கும் ஆயுதம் தாங்கிய படையினர் வலம் வருகின்றனர். இங்குள்ள பாடசாலையின் ஒருபுறம் கடற்படையினரும் மறுபுறம் இராணுவத்தினரும் நிலை கொண்டுள்ளனர். அத்துடன், பாடசாலையின் முன்புறமுள்ள பொலிஸ் நிலையத்தைக் கடந்தே மாணவர்கள் பாடசாலைக்குள் காலடியெடுத்து வைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குள் மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
‘பாடசாலையை வலைத்து இராணுவம் மற்றும் கடற்படை முகாம்கள் அமைந்துள்ளதால் மாணவர்களின் சுதந்திரமான நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆயுத சூழலுக்குள் இருப்பது போன்ற மனோநிலையே மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் குடியிருக்கக் கூடிய நிலங்களில் படையினர் நிலை கொண்டுள்ளதால் பொருத்தமற்ற இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மாணவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து பல சிரமங்களுடன் பாடசாலைக்கு வருகின்றனர்.’
எம்.ரீ.எம். பாயிஸ்
பதில் அதிபர்
மன்ஃ சிலாவத்துறை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை

சிலாவத்துறை மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடியிருப்புப் பகுதியிலேயே தற்போது கடற்படை முகாம் அமைந்திருக்கின்றது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கு சுமார் 200 குடும்பங்கள் வாழ்ந்தனர். அப்பகுதிக்குள் இருந்த வீடுகள், கடைகள், அரச கட்டடங்கள், பள்ளிவாசல், தென்னை மரங்கள் எல்லாம் யுத்த காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
M.I.M. Kamartheen
‘1844 ஆம் ஆண்டுக்கு முன்னிருந்து நாங்கள் வாழ்ந்து வந்த பூமியை இன்று கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். யுத்தம் முடிந்ததும் எம்மை மீள்குடியேறச் சொன்னார்கள். ஆனால், எமது நிலத்தை தராமல் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 56, 96 வீட்டுத் திட்டங்களில், பொருத்தமற்ற சகதியான நிலத்தில் எம்மைக் குடியேற்றினர். எமது சொந்த நிலமே எமக்குத் தேவை. அத்தோடு, இந்த கடற்படை முகாமுக்குள் பாரம்பரிய பள்ளிவாசல் ஒன்றுமுள்ளது. இப்போது அங்கு யாருமே செல்ல முடியாது. எமது பாரம்பரிய நிலத்தையும் பள்ளிவாசலையும் பெற்றுத்தருமாறு எமது மக்கள் சார்பாக அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.’
எம்.ஐ.எம். கமர்தீன்
தலைவர்
முகைதீன் ஜுமுஆ பள்ளிவாசல்
சிலாவத்துறை

சிலாவத்துறையின் பிரதான குடியிருப்புப் பகுதியில் கடற்படையினர் நிலை கொண்டிருப்பது இப் பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கு முதன்மையான சவாலாகும். தற்போது சுமார் 700 குடும்பங்களைக் கொண்ட சிலாவத்துறையில் இன்னும் 300 குடும்பங்கள் தானும் மீள்குடியேறவில்லை.
இங்கிருந்து கடற்படையினர் அகற்றப்பட வேண்டுமென அவ்வப்போது அரசியல் தரப்பினரிடமும் பாதுகாப்புத் தரப்பினரிடமும் மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் தமது கோரிக்கைக்கு எந்த விதமான பதில்களும் வழங்கப்படவில்லையென இம் மக்கள் தெரிவிக்கின்றனர். சிலாவத்துறை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடற்படை முகாம் தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலவியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்:
akram alavi ‘சிலாவத்துறையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் யுத்தகாலத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. நாட்டினதும் இப் பிரதேச மக்களினதும் பாதுகாப்பு கருதியே கடற்படை முகாம் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. சிலாவத்துறை இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதால் அப் பிரதேசத்தை மையமாக வைத்து கேரளா கஞ்சா கடத்தல், தங்கம் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. அவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக கடற்படை முகாம் இன்னும் அகற்றப்படாதுள்ளது. இவ் விடயங்கள் கட்டுப்படுத்தப் படுகின்ற போது கடற்படை முகாமை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்.’
யுத்த காலத்தில் வடக்கில் படை முகாம்கள் சூழ்ந்திருந்த சூழலில் மக்களது வாழ்க்கை எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இன்னும் தொடர்ந்து வருகிறது. யுத்த சூழல் முடிவுக்கு வந்தபோதிலும் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்த அமைதிச் சூழல் இன்னும் சரிவர உருவாக்கப்படவில்லை. ஏனெனில், அமைதியான வாழ்க்கை என்பது நாட்டில் அனைத்து மக்களும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் சகவாழ்வு வாழ்வதுதான்.
நாட்டில் யுத்தம் நிறைவடைந்துவிட்டது. எனினும் மக்களின் குடியிருப்புப் பகுதியில் படைமுகாம்களை வைத்துத்தான் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை. ஜனநாயக தேசமொன்றில் ஒரு பாடசாலை மாணவன் முதல் சாதாரண குடிமகன் வரை துப்பாக்கியையோ, துப்பாக்கி ஏந்தி நிற்கும் மனிதரையோ எந்நேரமும் கண்டு கொண்டிருக்கக் கூடாது. அது யதார்த்தமிக்க ஒரு வாழ்க்கையும் அல்ல.
எனவே சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்தும் கடற்படையினரையும் இராணுவத்தினரையும் அகற்றி, மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறி சுதந்திரமாக வாழ அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிலாவத்துறை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

This story was produced as an outcome of Internews’ One Srilanka Journalism Program held in 15 May 2016