கொழும்பு மாநகர கழிவுகளை புத்தளத்துக்கு கொண்டுவரும் அரசின் உத்தேச திட்டத்துக்கு புத்தளம் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கொழும்பு மாநகர சபையின் கழிவுகளை புத்தளத்துக்கு கொண்டுவரும் திட்டத்துக்கு எதிராக அங்குள்ள மக்கள் கையெழுத்துச் சேகரித்தல், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

– ஏ. முஹம்மத்பாயிஸ்

புத்தளம் பிரதேசத்தில் கங்கைவாடி, முரண்டாவெளி, பழைய எலுவான்குளம் போன்ற பிரதேசங்களில் நாளாந்தம் 1200 மெட்ரிக் தொன் கழிவுகளை கொட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பிரதேசத்திலுள்ள வளங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக இம்மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

‘கொழும்பிலுள்ள குப்பைகளை புத்தளம் அரவக்காடு பிரதேசத்தில் கொட்டுவதற்கான திட்டமிடல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடைபெற்றுவிட்டது. அரசாங்கம் முன்வைத்த சூழல்தாக்க அறிக்கையில் இத்திட்டத்தை நிராகரிப்பதற்கான கால எல்லை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தினால் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும் எலுவாங்குளம், கரைத்தீவு பிரதேசமக்கள் இது தொடர்பாக எந்த விழிப்புணர்வும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக பத்தாயிரம் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்திருக்கிறோம். புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைவரும் இன, மத பேதங்களுக்கு அப்பால் புத்தளம் பெரிய பள்ளிவாசலை தலைமையாகக் கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதில் ஒன்று பட்டிருக்கிறார்கள்.’
நாசிக் ஸமான்
செயலாளர்
புத்தளம் பெரிய பள்ளிவாசல்

இத்திட்டம் 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் மெட்ரோ கொழும்பு நகரஅபிவிருத்தி செயற்திட்டத்தின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட ஒன்றாகும். இத்திட்டம் தொடர்பாக EML நிறுவனம் தயாரித்த சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மக்களின் பார்வைக்காக (01.09.2015 – 13.10.2015) அரச பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

singn collecting

அதாவது, இத்திட்டத்தின்படி 20 அடிநீளமான 26 புகையிரதவண்டி கொள்கலன்கள் மூலம் 1200 மெட்ரிக் தொன் கொழும்பு மாநகர கழிவுகளை புத்தளத்துக்கு கொண்டு வருவதாகும். எனினும், கடந்த அரசினால் இத்திட்டம் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாவிடினும் அதனை பாரிய நகரம் மற்றும் சூழல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்களிடமிருந்து ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதனை புத்தளம் மக்கள் வன்மையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

‘‘கொழும்பிலுள்ள குப்பைகளைக் கொண்டு வந்து புத்தளத்தில் கொட்டப்போகிறார்கள் என்ற விடயத்தை EML அறிக்கை மற்றும் சூழல் அதிகார சபையின் தகவல்களை வைத்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

கொழும்பிலுள்ள குப்பைகளை புத்தளப் பிரதேசத்தில் கொட்டுவதனால் ஏற்படும் விளைவு சம்பந்தமாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம். அக்கடிதத்துக்கு இதுவரை எந்த பதிலுமில்லை. அதுமட்டுமல்லாமல், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். இருந்தாலும், மக்களின் எதிர்ப்புகளையும் மீறி அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது.
Poster
இந்தத் திட்டம் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. கடந்த மஹிந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும். கடந்த அரசாங்கத்தில் சம்பிக்க ரணவக்க அமைச்சராக இருந்த போதும் இத்திட்டத்தை செயல்படுத்த கடுமையாக செயல்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இத்திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க கங்கைவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு பணத்தை வழங்கி மக்களின் மனங்களை மாற்றுவதற்காக திட்டமிட்டு செயல்படுகிறார்கள். சூழல் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கையில் இருப்பதால் இத்திட்டத்தை ஜனாதிபதி நினைத்தால் நிறுத்த முடியும்.”
சமந்த கோரலே ஆராய்ச்சி
தலைவர், மக்கள் குரல் அமைப்பு

புத்தளத்தில் 1960 ஆம் ஆண்டு சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதிலிருந்து வெளியாகும் கழிவுகளால் சுற்றாடல் மாசடைந்து வந்ததோடு இத்தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் தூசுக் கழிவுகளால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் சுவாச நோயால் அவதியுற்றனர். இது தற்போது கட்டுப்படுத்தப்பட்டாலும் நுரைச்சோலையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நிலக்கரி வலுவினாலான அனல் மின்நிலையத்தின் மூலமும் மக்கள் சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொழும்பு மாநகரக்கழிவினை புத்தளத்திற்கு கொண்டுவருவது மரத்தில் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையைப் போன்றதாகவே உள்ளது.

கழிவுகளை புத்தளம் பிரதேசங்களில் கொட்டுவதனூடாக மழைக் காலங்களில் அவை புத்தளம் களப்புக்கே அடித்துச் செல்லப்படும். புத்தளம் களப்பு சுமார் 5000 இற்கும் அதிகமான மீனவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. 4000 இற்கும் அதிகமானோர் உப்பு உற்பத்தியிலும் இறால் வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இவ் அனைத்து தொழில் துறைகளும் புத்தளம் களப்பினை மையமாகவைத்தே மேற்கொள்ளப்படுகின்றன. இக்களப்பு கழிவுகளால் மாசடையுமாக இருந்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது ஜீவனோபாயத்தை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
”புத்தளம் பிரதேசம் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு திட்டங்களால் மாசடைந்து கொண்டு வருகிறது. தற்போது முன்மொழியப் பட்டிருக்கும் திட்டமான கொழும்பு மாநகர திண்மக் கழிவுகளின் பிரசன்னமானது புத்தள மண்ணுக்கு இன்னுமொரு மாசடைவுக் காரணியாகும்.

இத்திட்டத்துக்கு ஆதரவளிப்பவர்கள் மண் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலத்திலுள்ள பெரும் குழிகளை குப்பை கூளங்களைக் கொண்டு நிரப்புவது ஓர் ஆரோக்கியமிக்க செயற்பாடென்று நினைக்கிறார்கள். நான் வடமேல் மாகாண சுற்றாடல் மற்றும் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஹொல்சிம் கம்பனியிடம் இவ்வாறு அகழ்தெடுக்கப்பட்ட பகுதிகளை வளமான மண்ணைக் கொண்டு நிரப்பி மரங்களை நடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதன் பிரகாரம் அக்கம்பனி அநேகமான குழிகளை நிரப்பி வேம்பு மரங்களை நட்டியிருந்தது. இவ்வாறு நட்டிய மரங்கள் தற்போது கணிசமானளவு வளர்ந்திருப்பதன் காரணமாக 10 வருடங்கள் அல்லது அதற்கு மேலான கால எல்லைக்குள் நாளொன்றுக்கு 1200 மெட்ரிக் தொன் வீதம் குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதற்கு பிரேரித்திருக்கும் இத்திட்டத்திற்கு போதுமான, ஆழமான குழிகள் இங்கு இல்லை.
இவ்வாறான நிலையில், மழைக்காலங்களில் கழிவுகள் லுணூ ஓயா ஊடாக அடித்துச் செல்லப்பட்டு புத்தளம் களப்பினை அடையும். இக்குப்பையானது ஏனைய கழிவுகள் உள்ளடங்கலாக இலத்திரனியல் கழிவுகளையும் கொண்டிருக்கும். இது இப்பிரதேச உற்பத்திகளை முற்றாக அழிவடையச் செய்வதோடு, சுமார் 9000 குடும்பங்களின் வாழ்வாதாரங்களை இழக்கச் செய்வது மட்டுமல்லாமல், இறால் ஏற்றுமதியால் பெறப்படும் அந்நிய செலாவணியிலும் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்தும். இக்கழிவுகளால் கவரப்பட்டு வரும் காட்டு யானைகளாலும் இப்பிரதேச மக்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டு வந்து குவிக்கும் இந்த பிரேரணையினை இரத்துச் செய்யும்படி அரசிடம் வலிந்து கேட்டுக்கொள்கிறேன்.’’
எம்.எச்.எம். நவவி
பாராளுமன்ற உறுப்பினர்
புத்தளம் மாவட்டம்

காலா காலமாக குப்பைகள் கொழும்பின் மீத்தொட்டமுல்லை பிரதேசத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கண்கூடாக காணமுடியும். மீத்தொட்டமுல்லை பிரதேசத்தில் இந்தக் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப் பிரதேச மக்கள் படுகின்ற அசௌகரியங்களும் அவஸ்தைகளும் சொல்ல முடியாதவை. அதற்கு மாற்றுத் தீர்வு ஒன்று அரசினால் முன்வைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இதற்காக இந்தக் குப்பைகளை இன்னுமொரு மாவட்டத்துக்கு கொண்டுசென்று அங்கு வாழும் மக்களை கஷ்டத்திற்குள்ளாக்குவது எந்தவகையிலும் நியாயமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது.
புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலை மற்றும் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையம் ஆகியவற்றினால் புத்தளம் பிரதேச மக்கள் இன்னும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொழும்பு மாநகரசபையின் கழிவுகளை புத்தளத்துக்கு கொண்டுவரும் திட்டமானது இம்மக்களை மேலும் கஷ்ட்டத்துக்குள் உள்ளாக்கும். எனவே, இவ்விடயத்தில் அரசு கூடிய கவனமெடுத்து செயற்பட வேண்டும் என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாகும்.

This story was produced as an outcome of Internews’ One Srilanka Journalism Program held in May 2016