”எங்கள பத்தி நினைக்கக் கூட நாதியில்ல”
தொடரும் கொஸ்லாந்தை மக்களின் சோகம்!

் நாங்களும் அன்னைக்கே மண்ணுக்குள்ள புதைஞ்சி போயிருந்தால் இன்னைக்கு எங்களுக்கும் வீடு கிடைச்சிருக்கும். எங்க பிள்ளைகளுக்கு உதவி கிடைச்சிருக்கும். உயிரோட இருக்கோம், ஆனால், உதவிகள் எதுவும் இல்லை. தோட்டத்திலயும் வேலை இல்லை. வாழ்றதுக்கே வழி இல்லாம கஷ்டப்படுறோம்.ீீ கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியிலுள்ள 32 குடும்பங்கள் இப்படி அங்கலாய்க்கிறார்கள்.

– எஸ்.மேகலா-

சர்வதேச நாடுகளின் பார்வையை மலையக மக்கள் பக்கம் திரும்ப வைத்த மீரியபெத்த அனர்த்தம் நிகழ்ந்து சுமார் ஒன்றரை வருடங்கள் முழுதாக முடிந்துவிட்ட போதும், பாதிக்கப்பட்ட மக்களின் முகாம் வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது.

இவர்களின் நிலை இப்படியிருக்க, மீரியபெத்த அனர்த்தம் நிகழ்ந்த பிரதேசத்திலிருந்து சுமார் 70 அடி தூரத்திலுள்ள 14-15ஆம் இலக்க லயன்களில் வாழும் மக்கள் வாழவழியின்றி, உதவிகளும் ஏதுமின்றி உயிர்ராபத்தை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்றபோது அனர்த்தம் நிகழலாம் என்ற அடிப்படையில் அப்பகுதியின் சில பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அதன்படியே இப்பகுதியிலுள்ள குறித்த 32 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

்மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு சேர்ந்து நாங்களும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டோம். பிறகு பாதிக்கப்பட்டவர்களை தனியாகவும் எங்களை தனியாகவும் பிரித்து மீரியபெத்தையில் பாதிக்கப்பட்டவர்களை மாக்கந்த முகாமில் தங்கவைத்தார்கள். எங்களுக்கு மாசத்துக்கு 700 ரூபா சமுர்த்தி தருகிறோம். அதை எடுத்துக்கொண்டு தற்காலிகமாக சொந்தக்காரர்கள் வீட்டில் இருங்கள் என்றார்கள். ஒரு மாசம்தான் அந்த சமுர்த்தி காசும் எங்களுக்கு கிடச்சது. மறு மாசமே அதை நிறுத்திட்டாங்க. எங்களால சொந்தக்காரர்களுக்கு எந்த லாபமும் இல்ல. ஒரு முழுக் குடும்பத்தையும் அவங்களால பார்க்க முடியாது. அதனால மறுபடியும் இந்த லயன்களுக்கே வந்திட் டோம். இப்போ கிடைக்கிற கூலி வேலைய செய்து குடும்பத்தை கொண்டு நடத்துறோம். மண்சரிவு ஏற்பட்டதும் இந்தப் பாதை தேயிறளவு வாகனங்களில் வந்தவங்க இன்னக்கி நாங்க இருக்கோமா? இல்லையானு கூட பார்க்கவில்லைீீ என்கிறார்கள் இப் பகுதி மக்கள்.

எப்போது வேண்டுமானாலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் இம் மக்களுக்கு இன்னுமொரு தலையிடியாக மாறியிருக்கிறது யானைகளின் அட்டகாசம்.

இது குறித்து வீரமலை பாண்டியராசா குறிப்பிடுகையில்; ்நாங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே இங்கதான். கிட்டத்தட்ட 3-4 தலைமுறைகளை இந்த லயன்கள் கண்டுவிட்டன. ஆனால், இப்போ ஆறு மணிக்கு மேல இங்க இருக்கவே பயமா இருக்கு. வெளிய நடமாட முடியாது. கரண்ட் இல்ல. இருட்டுக்கு காட்டு யானைகள் வீடுவரை வர ஆரம்பிச்சிடுச்சி. குசினியெல்லாம் உடைச்சிருச்சி. வெளியில எந்த பொருளையும் வைக்க முடியாது. ீீ எனத் தெரிவித்தார்.

இத்தோட்டத்தின் பல குடும்பங்கள் தோட்டத் தொழிலையே நம்பியிருந்தாலும் அவர்களுக்கான வருமானம் போதுமானதாக இல்லை. சிலருக்கு தோட்ட நிர்வாகம் வேலை வழங்கினாலும் கெசுவல் என்ற பெயரிலேயே பல வருடங்களை கடத்திவிட்டது. இதனால் விரக்தியடைந்த பலர் நகர்ப் புறங்களை நோக்கி கூலித் தொழிலுக்காகச் செல்லும் நிலையை காணமுடிகின்றது.

நிரந்தர வேலையோ வருமானமோ இன்றி வாழும் இவர்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராடும் நிலை தோன்றியுள்ளது.

்எனக்கும் மூணு பிள்ளைங்க. 8பேர் இந்த வீட்டிலதான் வாழுறோம். எல்லாரும் படிக்கிறாங்க. போக்குவரத்து வசதி இல்ல. ஆட்டோ, லொறிலதான் அனுப்புறோம். அதுவும் ஒரு பிள்ளைக்கு மாசம் 1000 ரூபா வாகன செலவுக்கே போகுது. கூலி வேலை
செஞ்சித்தான் குடும்பம் நடத்துறோம். எங்களுக்கென்று எந்தவொரு உதவியும் கிடைக்கவும் இல்ல. இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்ல. அந்தளவு நொந்து போயிட்டம்.ீீ என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த சித்ரா.

மலையகப் பகுதிகளில் தற்போது மாலைவேளைகளில் கடும் மழை பெய்கிறது. ஆக மீண்டுமொரு அனர்த்தம் நிகழ்வதற்குள் இம்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது.

்உதவி தேவைப்படும்போது உதவாமல் எங்கள் உயிர் போனதற்குப் பின் யாருடைய உதவியும் எங்களுக்குத் தெரியப்போவதில்லை. எங்களுக்கு இவர்கள் புதிய வீடுகளை கொடுக்க வேண்டாம். பிள்ளைகளுக்கு உதவ வேண்டாம். உணவு, உடை தேவையில்லை. பாதுகாப்பான இடத்தை மட்டும் அடையாளப்படுத்திக் கொடுங்கள். நாங்கள் இங்குள்ள தகரங்களை கழற்றிச் சென்று கூடாரங்களை அமைத்துக் கொண்டு வாழ்நாளை கடத்திவிடுவோம்.ீீ என்ற கோரிக்கையை இப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.
இம்மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியது மலையகத் தலைமைகளின் கட்டாயக் கடமை!

்இன்னைக்கும் தலவாக்கலையில அடிக்கல் நாட்டுறோம், இரத்தினபுரில அடிக்கல் நாட்டுறோம், அங்க இத்தன வீடு திறந்து வச்சோம், இங்க இத்தன வீடு திறந்து வச்சோம்னு செய்தி வருது. ஆனால், எங்கள பத்தி நினைக்க கூட நாதியில்ல. அந்தளவு பாவப்பட்டவங்களா நாங்க?ீீ என்ற கேள்வியை இம்மக்கள் எழுப்புகின்றனர்.

இவர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட மலையகத் தலைமைகள்தான் பதில் சொல்ல வேண்டும். இதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் வழங்குவார்களா? அல்லது இவர்களுக்கு நாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்ற அதிகாரத் தோரணையில் இருக்கப் போகின்றார்களா?

This story was produced as an outcome of Internews’ Journalist Sprint Program held in December 2015, and published in the Uthayasooriyan on 21 April 2016